பிரான்சில் ஏசி வாங்க முண்டியடித்த மக்கள் - ஒருவருக்கொருவர் அடிதடி
ஐரோப்பிய நாடான பிரான்சில் அடுத்தடுத்து தாக்கி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏர்-கண்டிஷனர் வாங்குவதற்கு மக்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
குறிப்பாக, அங்குள்ள ‘லிடில்’ சூப்பர் மார்க்கெட்டுகளில் மலிவு விலை ஏசிகளை வாங்குவதற்காக மக்கள் முண்டியடித்ததில் பல இடங்களில் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் வரவழைக்கப்படும் அளவிற்கு சூழல் மோசமடைந்தது.
குறைந்த விலையில்..
பிரான்சில் உள்ள மற்ற கடைகளில் ஒரு சாதாரண ஏசியின் விலை இந்திய மதிப்பில் பல ஆயிரங்களைத் தாண்டி (சுமார் 1,200 யூரோக்கள்) விற்கப்படுகிறது. ஆனால், லிடில் சூப்பர் மார்க்கெட்டில் அடிப்படை ஏசி மாடல்கள் வெறும் 179 யூரோக்கள் (சுமார் 16,000 ரூபாய்) என்ற சலுகை விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தகவலைக் கேட்டு நூற்றுக்கணக்கான மக்கள் கடைகளின் முன்னால் குவியத் தொடங்கினர்.
ஏமாற்றமடைந்த மக்கள் - போலீஸ் குவிப்பு..
பாரிஸின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய லிடில் கடைக்கு வெளியே 200-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், அந்தக் கடைக்கு வெறும் இரண்டு ஏசிகள் மட்டுமே விற்பனைக்கு வந்ததாகக் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த இரண்டு கடைகளுக்கு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். "நீங்கள் கலைந்து செல்லாவிட்டால் கடையைத் திறக்க மாட்டேன்" என்று மேலாளர் ஒருவர் கத்தும் அளவிற்கு அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாரிஸின் புறநகர்ப் பகுதிகளான செவ்ரான் மற்றும் லிவ்ரி-கார்கன் ஆகிய இடங்களிலும் இதே நிலைதான் நீடித்தது.
சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வந்த கார்களால் ஒட்டுமொத்த சாலையும் ஸ்தம்பித்தது. "இது சுத்த பைத்தியக்காரத்தனம், பார்க்கிங்கில் ஏகப்பட்ட கூட்டம் இருந்ததால் காரை தூரமாய் நிறுத்திவிட்டு ஓடி வந்தேன், ஆனால் ஏசி கிடைக்கவில்லை" என உள்ளூர்வாசி ஒருவர் ஏமாற்றத்துடன் தெரிவித்தார்.