துருக்கி: மகப்பேறு அறுவை சிகிச்சை செய்ததற்காக 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியிடை நீக்கம்!

துருக்கியில் முறையான மருத்துவக் காரணங்கள் இன்றி அதிக அளவில் அறுவை சிகிச்சை (Caesarean Section) பிரசவங்களை மேற்கொண்டதற்காக 100-க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இந்த மருத்துவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, பணியிடை நீக்கம் செய்து, கட்டாய மறுபயிற்சி பெறவும் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவக் காரணம் இல்லாமல் தனியார் மருத்துவமனைகள் திட்டமிட்ட சிசேரியன் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்குத் தடை விதித்து, 2025 ஏப்ரலில் துருக்கி புதிய விதிகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு தரவுகளின்படி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் 38 நாடுகளிலேயே துருக்கியில்தான் சிசேரியன் பிரசவங்களின் விகிதம் மிக அதிகமாக உள்ளது.

அங்கு நடக்கும் ஒவ்வொரு 1,000 பிரசவங்களில் சுமார் 615 பிரசவங்கள் (61.5%) சிசேரியன் முறையில் செய்யப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு 10 குழந்தைகளிலும் ஆறுக்கும் மேற்பட்டவை அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளன.

இந்த சிசேரியன் பிரசவங்களின் விகிதத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.

அரசின் கட்டாய மறுபயிற்சிக்கு துருக்கியின் மருத்துவ சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சுகப் பிரசவத்திற்கு 12 மணி நேரம் வரை ஆகலாம், ஆனால் அறுவை சிகிச்சை செய்ய 30 நிமிடங்களே போதும் என்பதால் கால விரயம் தவிர்க்கப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், பிரசவக் கால சிக்கல்களால் ஏற்படும் சட்டப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவே அறுவை சிகிச்சை முறை தேர்ந்தெடுக்கப்படுவதாக மருத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோல மருத்துவர்களை தண்டிப்பதால் மட்டும் நாடு சிசேரியன் பிரசவங்களைச் சார்ந்திருப்பதற்கான அடிப்படைக் காரணங்களைத் தவிர்க்க முடியாது என்றும் கூறுகின்றனர்.

மாறாக மகப்பேறு பராமரிப்பு, பணியாளர் நியமனம் மற்றும் நோயாளிக்கான ஆதரவு போன்றவற்றில் சீர்த்திருத்தத்தை மேற்கொள்ளவும் வலியுறுத்துகின்றன.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel