பாங்காக் பப்பில் பயங்கர தீ விபத்து: மேலும் 22 பேர் கவலைக்கிடம்!

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கின் சாதுசாக் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற 'ராங் பீர் நா லாட் பிராவ்' என்ற இரவு நேர கேளிக்கை விடுதியில் (Pub) நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி இதுவரை 9 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் உட்பட மொத்தம் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 63 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பப்பில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, மேடையின் அருகே இருந்த ஏர் கண்டிஷனர் யூனிட்டின் மின்சார சுவிட்ச் போர்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு புகை வந்துள்ளது. அடுத்த சில நொடிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலத்த சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டது.

பப்பின் மேற்கூரையில் ஒலி புகாதவாறு அமைக்கப்பட்டிருந்த ஃபோம் பொருட்கள் மீது தீப்பொறி விழுந்ததால், பப் முழுவதும் மளமளவென தீ பரவி நச்சுப் புகை சூழ்ந்தது. பப்பின் முன்பக்க நுழைவாயிலில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், உள்ளே இருந்த நூற்றுக்கணக்கானோர் அலறியடித்துக்கொண்டு பின்பக்கமிருந்த அவசரக்கால வழியை நோக்கி ஓடினர்.

ஆனால், அங்கு பீர் பெட்டிகளும் மேசைகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் அவசரக்கால வழிகள் முற்றிலுமாக முடங்கியிருந்தன. இதனால் வெளியேற வழியின்றி கழிவறை மற்றும் சமையலறைப் பகுதிகளில் தஞ்சமடைந்த பலரே புகையினால் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விராகுல் மற்றும் பாங்காக் கவர்னர் சட்சார்ட் சிட்டிபுண்ட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டனர்.

விதிகளை மீறி அவசரக்கால வழிகளை அடைத்து வைத்திருந்ததே இவ்வளவு பெரிய உயிர்ச்சேதத்திற்கு முக்கியக் காரணம் என்றும், இதுகுறித்து தடயவியல் மற்றும் சட்டப்பூர்வ விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel