கொறடா உத்தரவை மீறினால் எம்.எல்.ஏ பதவி பறிபோகும் –சி.வி சண்முகத்திற்கு இன்பதுரை எச்சரிக்கை
அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எம்.எல்.ஏக்களுக்கு கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியதாவது:
“அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்.”
மேலும் அவர் கூறுகையில்,
சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது, கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களிப்பது, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்ப்பது அல்லது நடுநிலையாக இருப்பது ஆகியவை அனைத்தும் கட்சித் தாவலாகவே கருதப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்பதுரையின் இந்த எச்சரிக்கை அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கட்சிக்குள் நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
பகிரவும்: