கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

  டிசம்பர் 09, 2023 | 03:17 pm  |   views : 7


தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பலருடைய புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் மழைநீரில் சேதமடைந்துள்ளது என்று பலரும் தங்களது வேதனையைத் தெரிவித்து வந்தனர். அதேபோல், மக்களின் பலருடைய முக்கிய ஆவணங்களான ஆதார் அட்டை, ரேஷன் அட்டை எனப் பல ஆவணங்கள் சேதமடைந்ததாகவும், மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கவலை தெரிவித்தனர்.



இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம் ஒன்றை அமைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி, பொது மக்களுக்கு கட்டணமின்றி வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.



Also read...  குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!


அதன் அடிப்படையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வருகிற 11 ஆம் தேதி அன்றும், சென்னை மாவட்டத்தில், சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் வருகிற 12 ஆம் தேதி அன்றும் தொடங்கப்படும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும். மேற்படி சிறப்பு முகாம்களில், பொதுமக்களின் வசதிக்கென, இ-சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Tags :



குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!

2023-12-09 15:26:30 - 6 hours ago

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு! மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.