கிருஷ்ணராஜ சாகரில் இருந்து தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது?: டி.கே. சிவக்குமாரிடம் கேட்கும் கர்நாடக பா.ஜ.க
கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட காவிரி நீரின் அளவை வெளியட வேண்டும் என கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா இன்று முதலமைச்சர் டி.கே. சிவகுமாரிடம் கேட்டுக்கொண்டார்.
கர்நாடகா மாநிலம் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து விஜயேந்திரா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இதற்கு முந்தைய ஆண்டுகளின் இயல்பை விட குறைவான மழைப்பொழிவு இருக்கும் என முன்னறிவிப்புகள் இருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களில் கே.ஆர்.எஸ், அல்மட்டி மற்றும் நாராயண்பூர் நீர்த்தேக்கங்களில் இருந்து எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்பதை முதலமைச்சர் இன்று விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உங்கள் கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பதால், காங்கிரசின் மேலிடத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், கூட்டணி கட்சியுடன் நல்லுறவை பேணவும் உங்களுக்கு விருப்பம் உள்ளது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்பு வறட்சி நிலவியதை அப்போது நீங்கள் உணரவில்லை.
முதலமைச்சர் இப்போதுதான் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து, பொதுமக்களை தவறாக வழி நடத்தி கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.
முன்னதாக பருவமழை பற்றாக்குறை நிலவும் என மத்திய அரசு எச்சரித்ததை சுட்டிக்காட்டி, விதைப்பு பணிகளை மறுபரிசீலனை செய்யுமாறு கர்நாடக முதல்வர் விவசாயிகளை வலியுறுத்தி இருந்தார்.
இதைத்தொடர்ந்து பயிர் விதைப்பதற்கு முன்பு விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு முதல்வர் சிவக்குமார் விடுத்த வேண்டுகோளையும் கர்நாடக பாஜக தலைவர் விமர்சனம் செய்தார்.