‘தேசிய அளவில் திமுகவும், தவெகவும் இணைந்து செயல்பட வேண்டும்’ - திருமாவளவன்
‘திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தோம். இப்போதும் திமுகவுடனான நட்பு தொடர்கிறது. விசிக தவெக கூட்டணியில் இல்லை. தவெக உடனான கூட்டணி குறித்து பரிசீலித்து வருகிறோம்’ என நேற்று விசிக தலைவர் திருமாவளன் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்தது. திருமாவளவனின் இந்த நிலைப்பாடுமீது அரசியல் தலைவர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
“திமுக தனது செயல்பாட்டின்மூலம் விசிக கூட்டணியில் இல்லை என்பதை உணர்த்திவிட்டது என, முன்னாள் விசிக சட்டமன்ற உறுப்பினரை தங்கள் கட்சியில் சேர்த்துக்கொண்டதை குறிப்பிட்டு முன்னர் நான் கூறினேன். திமுகவுடன் எந்த பகையும் எங்களுக்கு இல்லை.
தேசிய அளவில் இருந்து அந்தக் கருத்தை நான் தெரிவித்தேன். எனது தனிப்பட்ட பாதிப்பையோ, தமிழ்நாடு, விசிக, திமுக ஆகியவற்றை மட்டும் தனியாக மனதில் வைத்து பேசவில்லை.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒரு அணியை அமைக்க வேண்டும். அந்த அணியில் திமுகவும், தவெகவும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது பார்வை. இதனை தமிழ்நாடு அரசியல்வாதிகளால், ஊடகவியலாளர்களால் புரிந்துகொள்ள முடியாது. இதனைச் சொல்லும்போது, ‘இவர் என்ன குழப்புகிறார்’ என பேசுவார்கள்.
இங்கு தவெகவும், திமுகவும் எதிரும் புதிருமான நிலையில் இருந்தாலும்கூட, தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதற்கு, மதவாத அரசியலை எதிர்ப்பதற்கு, அவர்களின் சதி அரசியலை முறியடிப்பதற்கு, உளப்படியே கொள்கை எதிரி எனக்கூறும் தவெகவும் அதில் இருக்கவேண்டும், பாஜகவை தொடர்ந்து எதிர்ப்போம் எனக்கூறும் திமுகவும், அந்த அணியில் இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து” எனத் தெரிவித்தார்.