இந்தியாவை 4-0 என வீழ்த்தி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிக்க வேண்டும்: ஹாரி ப்ரூக்

டி20 உலக கோப்பையை இந்தியா தொடர்ச்சியாக 2 முறை கைப்பற்றிய பிறகு, முதன்முறையாக ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு இந்திய டி20 அணி சுற்றுப் பயணம் செய்துள்ளது.

ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணிக்கு இந்தத் தொடர்கள் சிறப்பாக அமையவில்லை. அயர்லாந்து அணிக்கெதிராக 2 போட்டிகள் கொண்ட தொடரை 0-2 என இந்தியா இழந்தது.

தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆதிக்கம் செலுத்தலாம் என இந்தியா எதிர்பார்த்தது. ஆனால் இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் இந்தியாவை புரட்டி எடுத்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

2-வது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் இந்தியா 190 ரன்கள் குவித்தது. என்றாலும் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்தது.

3-வது போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 76 ரன்களில் சுருண்டு 125 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

பிரிஸ்டலில் நேற்று 4-வது போட்டியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து தொடரை 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.

5-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இதிலும் இந்தியா தோல்வியடைந்தால், ஒயிட்வாஷ் ஆகிவிடும். அத்துடன் 7 போட்டிகளில் 6-ல் தோல்வி என்ற அடிப்படையில் இந்தியா நம்பர் ஒன் தரவரிசையை இழக்கும் அபாயம் ஏற்படும். இங்கிலாந்து நம்பர் ஒன் இடத்தை பிடித்துவிடும்.

ஐசிசி டி20 தரவரிசையில் நாங்கள் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறுவதும், பிஃபா உலக கோப்பையில் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறுவதும் சிறப்பானதாக இருக்கும். அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் உலக அளவில் முதலிடத்தைப் பிடிக்கலாம் என்று எங்களிடம் கூறப்பட்டுள்ளது. அந்த இலக்கைத்தான் நாங்கள் நிச்சயமாகக் குறிவைத்துள்ளோம். இந்தியா ஒரு வலிமையான அணி.

கடந்த சில வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும இந்திய அணிக்கு, இந்த தொடர் சிறப்பானதாக அமையவில்லை. அதேவேளையில் எங்களுடைய திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் உண்மையாகவே எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தியாவை 4-0 என வீழ்த்தினால், இது மிகவும் சிறப்பான வெற்றித் தொடராக இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், நம்பர் ஒன் இடத்திற்கு செல்வது அதைவிட சிறப்பானதாக இருக்கும்.

இந்தியா இவ்வாறு மோசமாக விளையாடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதேவேளையில் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் வளர்ச்சி ஓரளவிற்கு சரியாக பிரதிபலிக்கிறது.

இவ்வாறு ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel