திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
கடந்த ஞாயிற்றுக்கிழமை(01.12.2024) இரவு ஏற்பட்ட பெஞ்சல் புயலின்போது திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம், துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அண்டம்பள்ளம் மின்மாற்றியில் ஏற்பட்ட மின்தடையை சரிசெய்யும் பணிக்காக வெறையூர் பிரிவிலிருந்து சென்ற மின்பாதை ஆய்வாளர் பாலசுந்தர் (வயது 56) மற்றும் கம்மியர் அண்ணாமலை (வயது 56) ஆகிய இருவரில் அண்ணாமலை பவித்திரம் தரைப்பாலத்தைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனதை தொடர்ந்து அவரை தேடியதில் நேற்று (03.12.2024) பிற்பகல் 03.00 மணியளவில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மின்சார வாரிய ஊழியர் அண்ணாமலை அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அண்ணாமலையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணாமலையின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், உயிரிழந்த அண்ணாமலை குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S