விஜய் – சங்கீதாவை சமரச மையத்திற்கு அனுப்ப வேண்டும்; விவாகரத்து வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு
விசாரணை தேதியை ஒத்திவைக்கக் கோரி மனு அளிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
தமிழக முதலமைச்சரும், நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தக் கோரிய இருதரப்பு கோரிக்கையையும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் 24-ம் தேதி சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு ஏப்ரல் 20-ம் தேதி முதல்கட்ட விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அப்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் விஜய் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால், அவரால் ஆஜராக முடியவில்லை. விசாரணை தேதியை ஒத்திவைக்கக் கோரி மனு அளிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
நீதிமன்றத்தில் நேற்று நடந்தது என்ன?
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், இந்த வழக்கு நேற்று (ஜூன் 15) செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. முதலமைச்சர் விஜய் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராவாரா அல்லது அவரது வழக்கறிஞர்கள் கால அவகாசம் கேட்பார்களா என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான ஊடகவியலாளர்களும் வழக்கறிஞர்களும் குவிந்திருந்தனர்.
விசாரணையின் போது இருதரப்பு வழக்கறிஞர்களும் நேரில் ஆஜராகி, வழக்கை வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவே நடத்த வேண்டும் என்று வாதிட்டனர்.
நீதிபதி சுஜாதா, வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கை நடத்த சங்கீதா தரப்புக்கு சம்மதமா? என்றார். இதற்கு அவர்கள் சரி என்றனர். வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்த மனு தான் போட்டிருக்கிறீர்கள், ஆனால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்த நான் அனுமதி வழங்கவில்லை’ என்றார்.
உடனே விஜய் தரப்பு வழக்கறிஞர்கள், "ஏற்கனவே இருந்த நீதிபதி இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்" என்று குறிப்பிட்டனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி சுஜாதா, "ஏற்கனவே இருந்த நீதிபதியிடம் நீங்கள் 'அப்பியரன்ஸ்' கேட்டு பெட்டிஷன் மட்டுமே கொடுத்திருக்கிறீர்கள். அவர்களும் அனுமதி அளிக்கவில்லை, நானும் கொடுக்கவில்லை. மேலும், இந்த வழக்கில் ஆஜராவதற்கான வக்காலத்து இன்னும் முறையாகத் தாக்கல் செய்யப்படவில்லை" என்றார்.
இதற்கு விஜய் தரப்பு, "வக்காலத்து ஏற்கனவே போட்டுவிட்டோம்" என்று கூற, "அப்படியென்றால் அதற்கான பிரிண்ட் அவுட் நகல் எங்கே? அடுத்த விசாரணையின்போது அதைச் சமர்ப்பியுங்கள்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து தனது உத்தரவில் நீதிபதி சுஜாதா சில முக்கிய நடைமுறைகளைச் சுட்டிக்காட்டினார்:
"முதலமைச்சர் விஜய்யின் வீட்டு முகவரி உள்ளது, ஆனால் மெயில் ஐடி இல்லை. அதேபோல சங்கீதாவின் மெயில் ஐடியும் சமர்ப்பிக்கப்படவில்லை. முதலில் இருவரின் மெயில் ஐடிகளும் வழங்கப்பட வேண்டும். விவாகரத்து கோரியுள்ள இந்த வழக்கில், முதலில் இருதரப்பையும் சமரச மையத்திற்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகுதான் இருதரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய வேண்டும். வக்காலத்து பிரிண்ட் அவுட் நகலையும் தர வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பிறகே, வழக்கை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்துவதா அல்லது நேரடியாக நடத்துவதா என்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும்" என்று நீதிபதி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சருக்குப் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் கால அவகாசம் தேவை என விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதி வைக்கக் கோரினர்.
அன்றைய தினம் வெள்ளிக்கிழமை (வேலை நாள்) என்பதை உறுதி செய்துகொண்ட நீதிபதி சுஜாதா, இருதரப்பு கோரிக்கையையும் ஏற்று வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.