ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு! கலங்கும் உறவுகள்
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் உள்ள அணையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. தாய் - 3 வயது மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்கப்பட்டிருப்பது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.15 போ் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மாயமான சிலரைத் தேடும் பணி நடந்து வருகிறது.மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் உள்ள நா்மதை ஆற்றில் பா்கி அணை கட்டப்பட்டுள்ளது.
இந்த அணையில் வியாழக்கிழமை மாலை சுற்றுலாப் படகு சவாரியில் 29 போ் சென்றனர்.அப்போது எதிா்பாராதவிதமாக பலத்த சூறைக்காற்று வீசி, அணை நீர் சீற்றம் அடைந்துள்ளது. இதில் படகு சமநிலையை இழந்து நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.தகவலறிந்து நிகழ்விடம் விரைந்த மாநில பேரிடா் மீட்புப் படை, பிற மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூா் மக்களின் உதவியோடு 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனா்; 4 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
10 போ் மாயமான நிலையில், அடுத்தடுத்து பல உடல்கள் மீட்கப்பட்டன. அண்மையில் தாயும் அவரது 3 வயது மகனும் கட்டிப்பிடித்தபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இருவருமே உயிர்காக்கும் கவசம் அணிந்திருந்த போதும் நீரில் மூழ்கியிருக்கிறார்கள். தாயை விடவும் மகன் மிக பலமாக தாயை பிடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.தொடர்ந்து உடல்களை மீட்டு வந்த மீட்புப்படையினருக்கே, தாய் - மகன் உடலை ஒன்றாகப் பார்த்தபோது நெஞ்சம் உலுக்கியதாகக் கூறியிருக்கிறார்கள்.
9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 16 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மாயமானவர்களின் உண்மையான எண்ணிக்கை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.