மெரினாவில் காணாமல் போன 2 வயது குழந்தை - விரைவாக மீட்ட சிங்கப்பெண் படை
சென்னை,
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாலபத்ராஜ் என்பவர் வந்து தனது மனைவி மற்றும் 2 வயது பெண் குழந்தை ஆகியோருடன் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். அவரது குழந்தை கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்தில் எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பாலபத்ராஜ் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு பணியில் இருந்த மயிலாப்பூர் சிங்கப்பெண் அதிரடி படையினர் உடனடியாக மெரினா கடற்கரை பகுதிக்கு சென்று அங்குள்ள பகுதிகள் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கலங்கரை விளக்கம் பின்புறம் இருக்கக்கூடிய குழந்தைகள் விளையாடும் பகுதியில தனியாக அந்த 2 வயது பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிங்கப்பெண் படையினர், அந்த குழந்தையை மீட்டு மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து போலீசார் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் பின்னர் குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் பெற்றோர் சிங்கப்பெண் அதிரடி படைக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
பகிரவும்: