சூசகமான பதிவா? தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் ஜோதிமணி ட்வீட்!

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திங்கள் கிழமை வெளியாகவிருக்கும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பொதுவாக வெளியிட்ட ஒரு ட்வீட் பேசுபொருளாகியிருக்கிறது.


தமிழ்நாட்டில், தவெகவின் வருகையால், தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையுமோ என்ற ஒரு சந்தேகம் பலரது மனதிலும் உலாவி வரும் நிலையில், மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவிருக்கிறது.


தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தாலும், நடிகர் விஜய்யின் தவெக வருகையால் கள நிலவரம் சற்று குழப்பத்துக்குள்ளாகியிருக்கிறது. தவெக பிரிக்கப்போகும் வாக்குகள் யாருக்குச் சொந்தமானவை, அதனால் வெற்றி பெற வேண்டிய கட்சி தோற்குமா? குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்புகள் இருக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.


இதற்கிடையே, சாதாரணமாக தேர்தல் களம் குறித்து கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.


தேர்தல் களத்தில் நேரடியாக ஒரு விவரத்தை மட்டும் மிகத் தெளிவாக உணர முடிகிறது. அதாவது 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், மாணவர்கள், இளைஞர்கள், பெண்களின் தாக்கம், நிச்சயமாக தேர்தல் முடிவை உறுதி செய்வதில் அடிப்படைக் காரணியாக அமையும் என்று பதிவிட்டிருக்கிறார்.


தேர்தலுக்கு முன்பு, திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைவதில் இழுபறி நீடித்தது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் அவ்வப்போது கூட்டணிப் பேச்சுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்திவந்தனர்.


ஒரு சில நாள்களுக்கு முன்பும், தேர்தல் முடிவைப் பொறுத்து முக்கிய முடிவு எடுக்கப்படும், ஆட்சி அதிகாரத்துடன்தான் இருப்போம் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிரிஷ் சோடங்கர் கூறி பரபரப்பைக் கூட்டியிருந்தார்.


இந்த நிலையில், தமிழ்நாட்டில் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும்பட்சத்தில், காங்கிரஸ் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கிடையேதான், ஜோதிமணியின் இந்த சாதாரண ஒரு கருத்து, இப்போதே காங்கிரஸ் தவெக பக்கம் சாயத்தொடங்கிவிட்டதாக பேசுபொருளாகி கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.



பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel