அண்ணாமலையை பாஜக ஆதரிக்காது: நிதின் நபின்

நமது சிறப்பு நிருபர்"முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே. அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகிவிட்டதால் அவரது அரசியல் செயல்பாடுகளை ஆதரிக்க மாட்டோம்' என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், "வீ தி லீடர்ஸ்' என்ற பெயரிலான இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்தார்.


அதில் பாஜகவை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள், அண்ணாமலையுடன் கைகோத்துச் செயல்பட்ட அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் இணைந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், அண்ணாமலையின் கட்சி விலகல் அறிவிப்புக்குப் பிந்தைய அரசியல் செயல்பாடுகள் தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய நிதின் நபினிடம் கருத்து கேட்கப்பட்டது.அதற்கு அவர், "அண்ணாமலை போன்ற பல இளைஞர்கள் தேசப் பணியில் ஈடுபட கட்சி அவர்களை எல்லா வழிகளிலும் ஊக்குவித்து ஆதரவாக இருந்தது.


தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதே மக்கள் சேவை. எங்களுடன் பயணித்த காலம் வரை அண்ணாமலையின் கருத்துகளுக்கும், யோசனைகளுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்போது அண்ணாமலை பாஜகவில் இல்லை. சில காரணங்களுக்காக பாஜகவில் இருந்து விலகுவதாகக் கூறி அதற்கான காரணங்களையும் அவர் விளக்கியுள்ளார். பாஜகவில் உறுப்பினராக இல்லாததால் அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்துகளையும், செயல்பாடுகளையும் நாங்களும் ஆதரிக்கப்போவதில்லை.


பாஜகவை பொருத்தவரையில், கட்சியே பிரதானம், அதன் சித்தாந்தங்களும் கொள்கைகளுமே பெரியவை. தனி மனிதர்களின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுபவரே சிறந்த தலைவராக இருக்க முடியும். எனவே, கட்சியில் இருந்து விலகிச் சென்றவரைப் பற்றி பேசுவதற்கு இனி ஒன்றுமில்லை' என்றார் நிதின் நபின்.



பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel