பஸ்சில் என்ஜினீயரின் மடிக்கணினியை திருடிய த.வெ.க. நிர்வாகி!

திருப்பூர் மாவட்டம் மன்னரை கிராமத்தை சேர்ந்தவர் ஆரோன் மகன் ஜெயக்குமார்(வயது 39). சிவில் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் ஜெயக்குமார், வேலை சம்பந்தமாக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அரசு பஸ் மூலம் மதுரைக்கு புறப்பட்டார். அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள ஒரு சாலையோர ஓட்டலில் நிறுத்தப்பட்டது.


அப்போது ஜெயக்குமார் தான் கொண்டு வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினியை இருக்கையின் கீழ் பகுதியில் ஒரு பையில் வைத்து விட்டு டீ குடிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது. அதே பஸ்சில் வந்த வாலிபர் ஒருவர். ஜெயக்குமாரின் மடிக்கணினியை திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார், சக பயணிகள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விக்கிரவாண்டி போலீசாரிடம் ஒப்படைத்தார்.


த.வெ.க. நிர்வாகி கைதுபோலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த முருக்கம்பாடி அண்ணா நகரை சேர்ந்த குமார் மகன் கண்ணப்பன் (32) என்பதும், தமிழக வெற்றிக் கழக கிளை செயலாளராக பதவி வகித்து வருவதும், திருக்கோவிலூர்-திருவண்ணாமலை இடையே ஓடும் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணப்பனை கைது செய்தனர்.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel