பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; முதல்-அமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் கோரிக்கை
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
சிறப்பு தொகுப்பு திட்டம்காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையை திறப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லாத நிலையில், 18 மணி நேரம் தடையில்லா மின்சார விநியோகம் உள்ளிட்ட 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார்.
தொடர் மின்வெட்டும்மின்சாரம் எப்போது வருகிறது? எப்போது போகிறது? என்பதைக்கூட கணிக்க முடியாத அளவுக்கு, நாள்தோறும் பலமுறை அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டும், மின் அழுத்த குறைபாடும் நிலவி வருவதால் மோட்டார் பம்புகளை இயக்க முடியாமலும், நெற்பயிர்களுக்கு உரிய நேரத்தில் போதிய நீரைப் பாய்ச்ச முடியாமலும் பயிர்கள் கருகி வருகின்றன.
18 மணி நேர தடையில்லா மின்சாரம்இந்த அவல நிலையை விவசாயிகள் பலமுறை சுட்டிக்காட்டி, தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தற்போது அறிவித்துள்ள 18 மணி நேர தடையில்லா மின்சார வழங்கல் அறிவிப்பை மட்டும் எவ்வாறு நம்புவது என்று விவசாயிகள் நியாயமான கேள்வியை எழுப்புகின்றனர்.
விவசாயிகள் தொடர் போராட்டம்ஆட்சிக்கு வந்தவுடன் குறு மற்றும் சிறு விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த தவெக அரசு, ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகள், மாநிலத்தின் நிதிநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றி வருவதை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் விவசாயிகளின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக, தவெகவின் தோழமை கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டம் அறிவித்திருக்கும் சூழலில், இனியும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்காமல், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததைப் போல குறு மற்றும் சிறு விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகமெங்கும் ஓங்கி ஒலித்து வருகிறது.
எனவே, தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளான தடையற்ற 24 மணி நேர மும்முனை மின்சாரம், முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி ஆகியவற்றை இனியும் புறக்கணிக்காமல், எந்தவித காலதாமதமும் இன்றி உடனடியாக நிறைவேற்றிடுமாறு தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பகிரவும்: